மும்பை: ஆசியக்கோப்பை 2022 தொடர் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதிவரை இலங்கையில் நடைபெறும் எனத்திட்டமிடப்பட்டிருந்தது. டி20 போட்டிகளாக நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் தகுதிச்சுற்றில் வெற்றியடையும் 6 அணிகள் விளையாட உள்ளன. தகுதிச்சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நான்கு அணிகள் மோத உள்ளன.
ஆசியக் கோப்பைத்தொடர் நடைபெற இருந்த இலங்கை நாடு பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பிரச்னைகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் தொடரை நடத்த இயலுமா என்ற கேள்வியெழுந்தது. ஜெயசூர்யா போன்ற மூத்த வீரர்கள் இலங்கையில் கிரிக்கெட் நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர்.
மழையில்லாத நாட்டிற்கு மாற்றம்:இந்நிலையில், ஆசியக்கோப்பைத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என பிசிசிஐ கூட்டத்திற்குப் பின் அதன் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆசியக்கோப்பைத் தொடர் மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால், மழைபெய்யாத ஒரே இடம் அதுதான்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ஆசியக் கோப்பையை தங்களால் நடத்த இயலாது என இலங்கை கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மேலும், பிசிசிஐ கூட்டத்தில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், போட்டிகளின் தேதிகள், மைதானங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.