கொழும்பு: 16வது ஆசியக் கோப்பை தொடர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி நடந்தன. இதன் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்த சூப்பர் 4 சுற்றில் மோதிக் கொண்ட இந்த அணிகளில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் ஒய்வு அளிக்கப்பட்ட விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். மேலும், ஆல் ரவுண்டர் அக்சட் படேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இணைக்கப்பட்டார்.
இலங்கை அணியில் ஒரே ஒரு மாற்றமாக மகேஷ் தீக்ஷனாவுக்கு பதிலாக துஷான் ஹேமந்த சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட இலங்கை அணியின் வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. அடுத்தடுத்து ஆட்டமிழந்து மிகவும் பரிதாபமான நிலையை எட்டியது.