லாகூர்:16வது ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதின் லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் தேர்வாகிய நிலையில், இன்று (செப்.06) அதற்கான முதல் போட்டி பாகிஸ்தான் லாகூர் மைதானத்தில் நடைபெறுகிறது.
இது பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பையின் கடைசி போட்டியாகும். இதில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக முகமது நைம் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் களம் இறங்கினர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த மெஹிதி ஹசன், இந்த ஆட்டத்தில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் லிட்டன் தாஸ் 16, முகமது நைம் 20 என அடுத்தடுத்து வெளியேறினர். பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தபோது, வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் நிதானமாக நின்று அணிக்கு ரன்களை சேர்த்தனர். இருப்பினும், அணி 145 ரன்களை எட்டிய நிலையில், ஷகிப் அல் ஹசன் 53 ரன்களில் வெளியேறினார்.