கொழும்பு (இலங்கை):ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்று போட்டி இலங்கையின் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று (செப். 12) நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி 49.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்து உள்ளது.
இதில், அணியின் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் அரைசதம் கடந்து 53 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து, விராட் கோலி 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியனுக்குத் திரும்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மேலும் கே எல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் 39, 33 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து, மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய அணி போராடி வந்தது. இதனிடையே 47வது ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 197 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் தொடங்கிய ஆட்டத்தின் 49.1வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது.
அதேநேரம், இலங்கை அணியின் துனித் வெல்லாலகி 5 விக்கெட்டுகளையும், சாரித் அசலங்கா 4 விக்கெட்டுகளையும் மற்றும் மஹீஷ் தீக்சனா 1 விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளனர். மேலும், இந்தப் போட்டியின்போது ரோகித் சர்மா 23 ரன்களை சேர்த்தபோது, ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் குவித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.