கொழும்பு: இலங்கை கொழும்புவில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3-ஆவது ஆட்டமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி இருவரும் பந்துகளை நாளா பக்கமும் சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 37 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா 42 பந்துகளில் 50 ரன்களை விளாசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50வது அரைசதத்தை உறுதிப்படுத்தினார். இதனால் ஒபனிங் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை எட்டியது.
இந்திய அணி 16.4 ஒவர்களில் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மன் கில்லும் அவுட் ஆனார். இந்த நிலையில் இந்தியா 24.1 ஒவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் ரிசர்வ் டேவுக்கு ஒத்திவைக்கப்பட்டு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இன்றும் மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. அதன் பின் மழை நின்றதால் ஆட்டம் 4.30 மணிக்கு மேல் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விராட் கோலி - கே.எல் ராகுல் ஜோடி விளையாடி இந்திய அணிக்கு ரன் மழைகளை குவித்தனர்.