கொழும்பு:ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா அணி இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில், இன்று சூப்பர் 4 சுற்றின் 5வது போட்டியாக இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் இரு அணிகளும் மோதும் முதல் போட்டியாகும். மேலும், இந்த போட்டியானது இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி ஆகும். இதில் வெற்றி பெறும் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறி, இந்திய அணியை எதிர்கொள்ளும். இரு அணிகளும் மோதிக்கொள்ளும் இந்த போட்டி இலங்கை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் அங்கு கனமழை பெய்ததன் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து மழையால் ஆட்டம் 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு 45 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆட்டத்தின் போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் 42 ஓவர்களாக மாற்றப்பட்டது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேடிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் ஃபகார் ஜமான் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஃபகார் ஜமான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த பாபர் அசாம் 29 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் அப்துல்லா ஷபீக் - முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடியது. ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த ஷபீக் 52 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் மற்றும் இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்தார்.
பாகிஸ்தான் அணி 238 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், இப்திகார் அகமது 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 47 ரன்களுடன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ரிஸ்வான் ஆட்டமிழக்க, இறுதியில் பாகிஸ்தான் அணி 42 ஒவர்கள் முடிவில் 252 ரன்கள் சேர்த்தது. இலங்கை பந்து வீச்சு சார்பில் மதீஷா பதிரானா 3 விக்கெட்டுகளும், பிரமோத் மதுஷன் 2 விக்கெட்டுகளும், துனித் வெல்லலகே மற்றும் தீக்ஷனா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலங்கை அணி 42 ஓவர்களில் 252 ரஙள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதனை அடுத்து இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய பதும் நிசங்கா - குசல் பெரோரா முறையே 29, 17 ரன்களில் வெளியேறினர்.
பின்னர் குசல் மெண்டீசும், சதீர சமரவிக்ரமா ஜோடி இணைந்து துரிதமாக ரன் சேகரிக்கத் துவங்கினர். சதீர சமரவிக்ரமா 48, குசல் மெண்டீஸ் 91, டசுன் ஷனகா 2 ரன்னில் அடுத்தடுத்து வெளியேறினர். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைத்து நின்று ஆடிய சரித் அசலங்கா கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையும் படிங்க:Asia Cup : இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் அணி எது? இலங்கை - பாகிஸ்தான் மோதல்!