பல்லேகலே: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் 16வது ஆசிய கோப்பை கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 3வது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் கேப்டன் ரோஹித் சர்மா பெரிய அளவில் சோபிக்கவில்லை. 11 ரன்களில் ஷஹீன் அப்ரிடி வீசிய பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களிலும், சுப்மன் கில் 10 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அதன் பின் வந்த இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 54 பந்துகளில் தனது 7வது அரைசதத்தை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து, மறுபுறம் விளையாடிய ஹர்திக் பாண்டியா 62 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
'266 ரன்கள்' எடுத்த இந்தியா: இந்தியா அணியை சரிவில் இருந்து மீட்டு சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 82 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை அடுத்து களமிறங்கிய ஜடேஜா 14 ரன்களில் வெளியேறினார். இறுதியில் 48.5 ஒவர்களில் 266 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்களும், நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரஃப் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணிக்கு 267 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்து இருந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் எவ்வித முடிவும் இல்லாமல் கைவிடப்பட்டது. ஆட்டம் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்ப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் விளையாடி 3 புள்ளிகள் பெற்ற நிலையில், சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற அடுத்த ஆட்டத்தில் நேபாளத்தை கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது.
இதையும் படிங்க:Asia Cup 2023 Live Score: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை