சார்ஜா:ஆசிய கோப்பை தொடரில் நேற்று (ஆக. 30) நடைபெற்ற போட்டியில் முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஷகிப் அல்- ஹாசன் தலைமையிலான வங்கதேச அணியும் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் முஜீப் உர் ரஹ்மான், ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொசாடெக் ஹொசைன் 48 ரன்களை எடுத்திருந்தார். தொடர்ந்து, ஆடிய ஆப்கானிஸ்தான் அணி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது. இதன்மூலம், ஆப்கன் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில், 16 ஓவர்கள் முடிவில் வெறும் 85 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்திருந்தது. அதன்பின்னர், ஷத்ரன் ஜோடியின் அதிரடியில், 17ஆவது ஓவரில் 17 ரன்களும், 18ஆவது ஓவரில் 22 ரன்களை குவித்து அசத்தினர்.ஆப்கன் சார்பில் அதிகபட்சமாக நஜிபுல்லா ஷத்ரன் 43 (17) ரன்களையும், இப்ராகிம் ஷத்ரன் 42 (41) ரன்களையும் எடுத்தனர்.