ராஜ்கோட்:இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட இடைவெளிக்கு பின் பெரிய அளவில் கம்பேக் கொடுத்த வீரர்களில் முக்கிய இடம் வகிப்பவர் 20 ஓவர் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா. கிரிக்கெட் மீதான காதலால் பள்ளிக்கூட பையை தூக்கி வீசிவிட்டு கையில் கிரிக்கெட் மட்டையை எடுத்தவருக்கு அதன்பின் எல்லாம் வெற்றி தான்.
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் உள்ளது போல், இந்திய 20 ஓவர் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு நிலவும் பஞ்சத்தை போக்குவதற்கே என்றே வந்தவர் போல் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா திகழ்ந்தார். அசூர வேகம் மற்றும் அதிரடி ஆட்டம் உள்ளிட்ட நுணுக்கங்களால் எளிதில் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
வேகமாக உச்சம் தொடும் நபர் அதேவேகத்தில் கீழே இறங்க வேண்டியிருக்கும் என்ற நியதி ஹர்த்திக்கின் வாழ்கையிலும் பிரதிபலித்தது. மூட்டு பகுதியில் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், நீண்ட நாட்களுக்கு கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டார்.
காயம் குணமான பின்னும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கான இடம் கேள்விக் குறியாகவே காணப்பட்டது. இந்த நிலையில் உள்ளுர் போட்டியில் அதிரடி ஆட்டத்தின் மூலம் தான் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டதை நிருபித்தார் ஹர்திக் பாண்டியா.
கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 2 அணிகள் அறிமுகமான நிலையில், அதில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். பெரியளவிலான அனுபவம் இல்லாதவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஹர்திக் பாண்டியா மீது பல்வேறு விமர்சன கனைகள் தொடுக்கப்பட்டன.