லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 23ஆம் தேதி நடந்து முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 27ஆம் தேதி) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கேமரூன் கிரீன் பதிலாக டாட் மர்பி சேர்க்கப்பட்டு இருந்தார்.
இதையடுத்து, பேட் செய்த இங்கிலாந்து அணி 62 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், பென் டக்கெட் 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜாக் கிராலி 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களிலும், ஜோ ரூட் 5 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். அதன் பின் வந்த ஹாரி புரூக்குடன் சேர்ந்து ரன்கள் சேர்த்த மொயின் அலி 34 ரன்கள் எடுத்து மார்பியிடம் போல்ட் ஆனார்.