லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும், இங்கிலாந்து 1 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை (ஜூலை 19) தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் சேர்த்திருந்தது.
அதை தொடர்ந்து நேற்றய முந்தினம் (ஜூலை 20) ஆடிய ஆஸ்திரேலியா அணி 317 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லபுசன் 6 பவுண்டரிகளுடன் 51, மிட்செல் மார்ஸ் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 51, ஹெட் 7 பவுண்டரிகளுடன் 48, ஸ்மித் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்களை சாய்த்தார். ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்களும் , ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் மற்றும் மொயின் அலி தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 72 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 384 எடுத்து 67 ரன்கள் முன்னிலை வகித்தது. பென் ஸ்டோக்ஸ் 24, புரூக் 14 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். தொடர்ந்து நேற்று (ஜூலை 21) ஆடிய இங்கிலாந்து அணி ஸ்டோக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 51 ரன்களிலும், புரூக் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.