ஐதராபாத் :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மா மற்ற்ம் சுப்மான் கில் தொடங்கினர்.
ஆரம்பமே அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா தனது பங்கிற்கு 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி குழுமியிருந்த ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். அபாரமாக விளையாடிய விராட் கோலி நியூசிலாந்து பந்துவீச்சை விளாசி தள்ளினார். அடித்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் கடக்க மறுமுனையில் தனது ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 50வது சதத்தை பூர்த்தி செய்தார்.
50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய ஜாம்பவான் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்து புது உலக சாதனை படைத்தார். 291 ஆட்டம் 279 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள விராட் கோலி, 72 அரைசதம் 50 சதம் என ஏறத்தாழ 13 ஆயிரத்து 800 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்து உள்ளார்.
மைதானத்தில் விராட் கோலி சதம் அடிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அனுஷ்கா ஷர்மா, தனது கணவருக்காக நீண்ட பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து விராட் கோலி தனது 50வது சதத்தை பதிவு செய்ததும், காதல் ஜோடி மைதானத்திற்குள்ளேயே தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.
மைதானத்தில் விராட் கோலியும், நட்சத்திர கேலரியில் அனுஷ்கா ஷர்மாவும் ஒருவர் மாற்றி ஒருவர் தங்களுக்குள் பறக்கும் முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். கடந்த 2015ஆம அண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அனுஷ்கா சர்மாவால், விராட் கோலியின் கவனம் சிதறியதாக கூறி ரசிகர்கள் சமூக வலைதளங்கள் ட்ரோல் செய்தனர். மேலும் அனுஷ்கா சர்மா - விராட் கோலி குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை அள்ளி தெளித்து வந்தனர். ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பின்னர் அதே ரசிகர்கள் அனுஷ்கா - விராட் கோலியின் அன்பை பகிர்ந்து கொள்ளும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :Virat Kohli 50th Century : ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 50வது சதம்! சச்சின் சாதனை முறியடிப்பு!