ஐதராபாத் : காயம் காரணமாக இலங்கை அணியில் இருந்து விலகிய மத்தீஸா பதிரனாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
லீக் சுற்று ஆட்டங்களில் விறுவிறுப்பு கட்டத்தை அடைந்து உள்ள நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க அணிகள் போராடி வருகின்றன. இந்நிலையில், இலங்கை அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஒரு வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இலங்கை வீரர் மத்தீஸா பதிரனா தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ளார். ஐதராபாத்தில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மத்தீஸா பதிரானவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். காயம் குணமடையாத நிலையில், அணியில் இருந்து அவர் விலகியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். அனுபவம் வாய்ந்த வீரரான மேத்யூஸ் இலங்கை அணிக்காக இதுவரை 221 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3 சதம், 40 அரை சதம் உள்பட 5 ஆயிரத்து 865 ரன்கள் சேர்த்து உள்ளார். மேலும் 120 விக்கெட்டுகளையும் மேத்யூஸ் கைப்பற்றி உள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி வரும் மேத்யூஸ்க்கு இது நான்காவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக இலங்கை அணியில் இருந்து விலகும் இரண்டாவது வீரர் மத்தீஸா பதிரங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கால் மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை கேப்டன் தசுன் சனகா அணியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக சமிகா கருண்ரத்னே அணியில் சேர்க்கப்பட்ட நிலையில், விக்கெட் கீப்பர் குசல் மென்டிஸ் கேப்டன் பொறுப்பை கவனித்து வருகிறார். அரைஇறுதி வாய்ப்பில் தொடர இனி வரும் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இலங்கை அணி உள்ள, நாளை (அக். 26) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க :இமாச்சல பிரதேச முதலமைச்சருடன் விராட் கோலி திடீர் சந்திப்பு! என்ன காரணம்?