லண்டன்: நடப்பாண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி மொத்தமாக 9 லீக் ஆட்டங்களில் விளையாடி, அதில் 4 வெற்றிகளையும், 5 தோல்விகளையும் சந்தித்தது. லீக் சுற்றின் இறுதியில் இந்த அணி புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தை பிடித்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த பங்களிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அவர்களால் இந்த உலகக் கோப்பையில் சில வரலாற்று சாதனைகளை படைக்க முடிந்தது. அரையிறுதிக்கு தகுதி பெறாத ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் தனது தாயகத்திற்கு திரும்பியது.
இதனிடையே ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரசித் கானுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஒய்வு பெற்று வந்த சூழலில், அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்த நிலையில், ரசித் கானுக்கு அறுவை சிகிச்சை நிறைவடைந்ததாகவும், அவர் விரைவில் குணமடைவார் எனவும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.