புனே: நடப்பாண்டு உலக கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொறு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடத்திற்கு முன்னேறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இத்தொடரின் 30வது லீக் ஆட்டம் அக்டோபர் 30ஆம் தேதி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குசல் மண்டீஸ் தலைமையிலான இலங்கை அணியும் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.
இலங்கை அணி நடப்பாண்டு உலக கோப்பையில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த அணி பேட்டிங்கில் நல்ல நிலையில் ஆடி வந்தாலும், பந்து வீச்சில் சொதப்பியதால், அவர்கள் தோல்வியை சந்தித்தனார். ஆனால் கடந்த போட்டியில், சிறப்பாக பந்து வீசிய அவர்கள் இங்கிலாந்து அணியை 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர்.
குறிப்பாக லஹிரு குமார 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மேலும், வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன காயம் காரணமாக நடப்பாண்டு உலக கோப்பையில் இருந்து விலகியதால், மாற்று வீரராக அனுபவம் வாய்ந்த ஏஞ்சலோ மேத்யூஸை கடந்த போட்டியில் சேர்த்தனர். அவரும் தனது அசத்தலான பந்து வீச்சால் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில், அவர்களும் விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளனர். இவர்கள் பெற்ற வெற்றி இரண்டுமே வரலாற்று சிறப்புமிக்கது. ஒன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக தங்களது அசத்தலான பந்து வீச்சால் வெற்றி பெற்றனர். மற்றொன்று பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது நிதானமான பேட்டிங்கின் மூலம் வெற்றி பெற்றனர். குறிப்பாக இவர்களது சுழற்பந்து வீச்சே இவர்களுக்கு பலமாக உள்ளது. அதனால் நாளைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
மோதும் அணிகள்: இலங்கை - ஆப்கானிஸ்தான்.