சென்னை:இந்தியாவில் ஐபிஎல், டிஎன்பிஎல் போன்ற தொடர்கள் மூலம் டி20 கிரிக்கெட் தொடர் பிரபலமானதை போல சமீப காலமாக 10 ஓவர்கள் கொண்டு நடத்தப்படும் டி10 தொடர்களும் பிரபலமாகி வருகின்றது. அந்த வகையில் இந்த தொடர் இந்தியாவிலும் நடத்தப்பட இருக்கிறது.
ஐ.எஸ்.பி.எல் (ISPL) என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர்.
அந்த வகையில் மும்பை அணியை நடிகர் அமிதாப் பச்சன் வாங்கிய நிலையில், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை நடிகர் அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியைத் தெலுங்கு நடிகர் ராம் சரணும் வாங்கி உள்ளனர்.
ஆனால், கொல்கத்தா மற்றும் சென்னை அணியின் உரிமையாளர்கள் யார் என்பதை மட்டும் ரகசியமாக வைத்து இருந்த நிலையில் தற்போது சென்னை அணியின் உரிமையாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் யார் என்பதை மட்டும் வெளியிடாமல் வைத்துள்ளனர்.