ஹைதராபாத்: ஐசிசி நடத்திய 13வது உலகக் கோப்பை கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றது.
இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் இருந்து உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலியாவும் முன்னேற, இந்த போட்டியானது கடந்த 19ஆம் தேதி உலகின் அதிக பார்வையாளர்கள் அமரக்கூடிய அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இப்போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக கோப்பையை வென்றது. இந்த இறுதி போட்டி உள்பட, நடைபெற்ற 48 போட்டிகளை சுமார் 12.5 லட்சம் ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளனர்.