ஹைதராபாத்:13வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். அதில் நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு அணிகளும் 2 பயிற்சி போட்டிகள் விளையாடும் முறையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது.
கணேஷ் விசர்ஜனம் மற்றும் மிலாடி நபி ஏற்பாடு காரணமாக இன்றைய போட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க இயலாது என ஹைதராபாத் காவல்துறை கூறியுள்ளனர். இதனால் இன்றைய போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெறும் இரண்டாவது பயிற்சி போட்டி மற்றும் அக்டோபர் 6, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் உலகக் கோப்பை லீக் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.