இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, கடந்த மாதம் சுவிட்சர்லந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் நுழைந்து தங்கப்பதக்கம் வென்றார்.
பி.வி. சிந்து உலக சாம்பியன் பட்டம் வெல்ல மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் தென் கொரியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் பயிற்சியாளர் கிம் ஜீ ஹியுன். கடந்த மார்ச் மாதம் இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளர் கோபி சந்த், சிந்துவிற்கு பயிற்சியாளராக கிம்மை நியமித்தார்.
அதன் பின் கடந்த நான்கு மாத காலமாக பி.வி.சிந்துவின் வெற்றிக்கு வழிவகுத்த கிம் ஜீ ஹியுன் குடும்பத்தினரால் ஏற்பட்ட சூழ்நிலைக்காரணமாக தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த இருபது ஆண்டுகளாக பேட்மிண்டன் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கிம் ஜீ ஹியுன் சர்வதேச பேட்மிண்டன் வீரராகவும் செயல்பட்டவர். இவரின் வருகைக்குப் பிறகே 42 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு, உலகசாம்பியன்ஷிப் தொடரில் பி.வி.சிந்து மூலம் தங்கப் பதக்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பி.வி. சிந்து கூறுகையில், 'கிம் ஜீ ஹியுன் பதவிவிலகியுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. மேலும் அவரது கஷ்டங்கள் அனைத்தும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். எனக்கு கிம்மினுடைய இந்த முடிவு எதிர்பாராத ஒன்று. அவர் என்னை சகத்தோழி போன்று தான் வழிநடத்தியுள்ளார். அவரின் வழிநடத்துதலினால் தான், என்னுடைய ஆட்டம் முன்னேற்றமடைந்தது' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற முதல் இந்தியர் பி.வி.சிந்து