இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையாக வலம்வருபவர் சாய்னா நேவால். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர், இந்தியாவிற்காக பேட்மிண்டன் விளையாட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
இவர் சர்வதேச பேட்மிண்டன் விளையாட்டில் 24 பட்டங்களையும், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருக்கிறார். மேலும் சர்வதேச பேட்மிண்டனில் நம்பர் ஒன் இடத்தையும் இவர் பிடித்திருந்தார். மேலும் இவர் இந்திய அரசால் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது ஆகிய விருதுகளையும் பெற்றார்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அருண் சிங் முன்னிலையில், அக்கட்சியில் சாய்னா நேவால் இன்று இணைந்துள்ளார். சாய்னாவுடன் அவரது மூத்த சகோதரியான சந்திரான்ஷும் பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக சாய்னா, பாஜகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.