ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் கலந்துகொண்ட இந்திய வீரர்கள், வீராங்கனைகள் முதல், இரண்டாவது சுற்றுகளில் தோல்வியைத் தழுவி வெளியேறினர்.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் சக இந்திய வீரர் சவுரப் வர்மாவை 21-11, 15-21, 21-19 என்ற செட்களில் வீழ்த்தி முன்னாள் நம்பர் ஒன் வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு தகுதிபெற்றார். இதனிடையே இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் கிதாம்பி ஸ்ரீகாந்த் சீனாவின் சென் லாங்கை சந்தித்தார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஸ்ரீகாந்த் 21-13 எனக் கைப்பற்றியிருந்த நிலையில், சீன வீரர் சென் லாங் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன்மூலம் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
முன்னதாக நடப்பு ஹாங்காங் ஓபனில் முதல் சுற்றுப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மொமோட்டோ விலகியதால் பை முறையில் ஸ்ரீகாந்த் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தார். தற்போது காலிறுதியிலும் சீன விலகியதைத் தொடர்ந்து நேரடியாக அரையிறுதிக்கு கிதாம்பி ஸ்ரீகாந்த் நுழைந்திருக்கிறார்.
2017ஆம் ஆண்டுக்குப்பின் எந்தவொரு தொடரையும் வெல்லாமல் இருக்கும் ஸ்ரீகாந்த் எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.