2019ஆம் ஆண்டுக்கான ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, ஜப்பானின் அயா ஒஹாரியுடன் மோதினார்.
முதல் செட்டை 11-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்த பி.வி. சிந்து, இரண்டாவது செட்டை 21-10 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய அவர், 21-13 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். இதன்மூலம், பி.வி. சிந்து 11-21, 21-10, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகனே யாமுகிஷியை எதிர்கொள்ள உள்ளார். இதேபோல், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில், இந்திய வீரர் சாய் பிரனீத் 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானை சேர்ந்த கன்டாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.
மற்றொரு இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்திய வீரரான ஹெச். எஸ். பிரனாய் 9-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் ரஸ்மஸ் ஜெம்கேவிடம் தோல்வி அடைந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ஹூவாங் - லியூவை தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.