நேபாளத்திலுள்ள காத்மண்டு, போக்ஹராவில் 13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், பேட்மிண்டன் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கிதாம்பி ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய ஆடவர் அணி இலங்கை அணியுடன் மோதியது. இதில், ஒற்றையர் பிரிவில் கிதாம்பி ஸ்ரீகாந்த் 17-21, 21-15, 21-11 என முதல் போட்டியில் இலங்கையின் தினுகா கருணாரத்னேவை தோற்கடித்தார்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா 21-17, 11-5 என்ற கணக்கில் இலங்கை வீரர் சச்சின் பரமேஸ்வரனுடனான போட்டியில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது, காயம் காரணமாக சச்சின் பரமேஸ்வரன் விலகியதால், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கத்தொடங்கியது.
இதையடுத்து, ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அருண் ஜார்ஜ், சன்யாம் சுக்லா ஜோடி 18-21 21-14 11-21 என்ற செட் கணக்கில் இலங்கையின் சச்சின் - தரிந்து இணையிடம் தோல்வியடைந்தது. இந்த நிலையில், நடைபெற்ற இரண்டாவது இரட்டையர் பிரிவு போட்டியில் கிருஷ்ண பிரசாத் - துருவ் கபிலா இணை 21-14 21-18 என்ற நேர்செட் கணக்கில் கருணாரத்னே - ஹசிதா சனக்கா ஜோடியை வீழ்த்தியது. இதன் மூலம், இந்திய ஆடவர் அணி இப்போட்டியில் 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.