சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் 2019ஆம் ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில், தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய வீராங்கனை பி.வி. சிந்து படைத்தார். அதே நாளில்தான், மற்றொரு பேட்மிண்டன் வீராங்கனையும் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
ஆனால், சிந்துவின் வெற்றியால் அவரின் சாதனை யார் கண்ணுக்கும் தெரியாமல்போனது. மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பேட்மிடன் உலக சாம்பியன்ஷிப் தொடரும் அதே பசெல் நகரில்தான் நடைபெற்றது. அதில், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மானசி ஜோஷி, இந்தியாவைச் சேர்ந்த பார்மரை எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய மானசி 21-12, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று தங்கம் வென்றார்.
மும்பையை சேர்ந்த இவர் இளம் வயதில் இருந்தே பேட்மிண்டனில் அதீத ஆர்வம் கொண்டவர். 2011இல் நடந்த சாலை விபத்தில் இவரது இடது கால் மீது வாகனம் ஒன்று ஏறியதால் அந்தக் காலை இழந்தார். எனினும், பேட்மிண்டன் விளையாட இவருக்கு இது ஒரு தடையாக இல்லை. வாழ்வில் கடுமையாக போராடினால் வெற்றிபெறலாம் என்பதை இவர் பாரா பேட்மிண்டனில் பல பதக்கங்களை வென்று பலமுறை நிரூபித்திக் காட்டினார்.