கரோனா ஊரடங்கு காலத்தை எவ்வாறு சமாளித்தார், டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஒத்திவைப்பு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது, வரவிருக்கும் ஆசிய கோப்பைக்கான தயாரிப்பு, தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் உடனான தனது பயிற்சி உள்ளிட்டவை இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "ஒரு வழக்கமான செயல்முறையை திடீரென்று நிறுத்துவது என்பது மிகவும் கடினம். ஆனால் அதே நேரத்தில் எல்லாவற்றையும் இடைநிறுத்திவிட்டு நமது உடல்நிலையை கவனித்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அனைவரும் உணர்ந்தோம்.
நான் வீட்டில் உடற்பயிற்சி மேற்கொண்டதன் மூலம் என்னை சுறுசுறுப்பாக வைத்திருக்க முயற்சித்தேன், அது எனக்கு மிகவும் உதவியது. நானும் எனது குடும்பத்தினருடன் நிறைய நேரம் செலவிட்டேன், ஓவியம் போன்ற சில பொழுதுபோக்குகளையும் செய்துவந்தேன்.
இந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் கரோனா தொற்றுநோய் காரணமாக 2021 கோடைகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. கரோனா சூழலை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் தொடர் ஒத்திவைக்கப்படும் என்ற யூகித்து இருந்ததால், மன ரீதியாக அதனை எதிர்கொள்ள தயாராக இருந்தேன். தற்போது, டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் போட்டியிட மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை தயார்படுத்தி வருகிறேன்.
ஆசியாவில் நடைபெறயுள்ள போட்டிகளில் பங்கேற்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீண்ட காலத்திற்குப் பிறகு நான் மீண்டும் களத்தில் விளையாட ஏதுவாக பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறேன். இந்த இடைவெளி ஒரு விளையாட்டு வீரராக எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் மேம்படுத்தவும் உதவியது" என்றார்.