உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க பல நாடுகளும் மும்முரமாக செயல்படுகின்றன. இச்சூழலில், நடப்பு சீசனுக்கான பேட்மிண்டன் தொடர் வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத், தற்போதைய சூழ்நிலையில் பேட்மிட்டன் தொடரை நடத்த பிடபிள்யூஎஃப் (உலக பேட்மிண்டன் சம்மேளனம்) கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால் கரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்படாமல் பிடபிள்யூஎஃப் எந்த ஒரு பேட்மிட்டன் தொடரையும் நடத்தக் கூடாது. வரும் செப்டம்பர் மாதம் முதல் பேட்மிண்டன் தொடர் நடைபெறும் என அவர்கள் தெரிவித்திருந்தாலும், திட்டமிட்டபடி நடைபெற சாத்தியமில்லை என நான் நினைக்கிறேன்.
அட்டவணையின்படி மீண்டும் பேட்மிண்டன் போட்டிகள் தொடங்கினாலும், நாங்கள் இன்னும் பயிற்சியைத் தொடங்காததால், அதில் பங்கேற்க எங்களுக்கு சற்று கடினமாகவே இருக்கும்.
மேலும் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்ததால் போட்டியில் பங்கேற்பதற்கான உடல் தகுதியைப் பெற எங்களுக்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது தேவைப்படும்" என தெரிவித்தார்.
கரோனா காரணமாக நடப்பாண்டில் நடைபெறும் இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்தாண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது. இது குறித்து பேசிய அவர், என்னைப் பொறுத்தவரையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டது சரியான முடிவாகத்தான் நான் பார்க்கிறேன் எனத் தெரிவித்தார்.
27 வயதான இவர் கடந்தாண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பிடபள்யூஎஃப் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், பிரகாஷ் படுகோனேவை அடுத்து வெண்கலப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதனால் இந்த ஆண்டிற்கான விளையாட்டு உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் தகுதியை நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து, சாய் பிரனீத் ஆகியோர் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.