வெள்ளி மங்கை தங்க மங்கையாக மாறிய பி.வி. சிந்து
இந்திய பேட்மிண்டனின் நட்சத்திர வீராங்கனையாக பி.வி. சிந்து திகழ்ந்தாலும், சர்வதேச அளவில் தங்கப் பதக்கம் வென்றதில்லையே என்ற வருத்தம் பெரும்பாலான பேட்மிண்டன் ரசிகர்களுக்கு இருந்தது. அதற்கு முக்கிய காரணமே, 2016 ஒலிம்பிக், 2017, 2018 உலக பேட்மிண்டன் என இந்த மூன்று தொடர்களின் இறுதிப் போட்டிகளிலும் அவர் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றார்.
அந்த வருத்தத்தை போக்கும் வகையில், இந்த ஆண்டு (2019ஆம் ஆண்டுக்கான) உலக பேட்மிண்டன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தார். சுவிட்ஸர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் அவர் 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் நஸோமி ஒகுஹராவை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன்மூலம் இந்தத் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனைக்கு அவர் சொந்தக்கரார் ஆனார்.
இந்த வெற்றியின் மூலம், சிந்து இறுதிப் போட்டிகளில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 2019இல் உலக பேட்மிண்டனில் தங்கம் வென்றதை போல, அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் நானா செதுக்குனது - தங்கமங்கை மானசி ஜோஷி
உலக பேட்மிண்டன் தொடரில் சிந்து தங்கம் வென்ற அதேநாளில்தான் இந்தியாவின் மற்றொரு வீராங்கனையும் தங்கம் வென்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் மானஸி ஜோஷி சக நாட்டைச் சேர்ந்த பார்மரை 21-12, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று தங்கம் வென்றார்.
இளம் வயதிலிருந்தே பேட்மிண்டனில் அதீத ஆர்வம் கொண்ட இவருக்கு 2011இல் ஏற்பட்ட சாலை விபத்தின்போது தன் இடது காலை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு கால் இழந்தாலும், வாழ்க்கையில் சாதிக்க முடியாது என்று அர்த்தம் கிடையாது என்பதை அவர் இந்தத் தொடரில் தங்கம் வென்று நிரூபித்தார். என் கடுமையான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிதான் இந்தத் தங்கம் என மானசி ஜோஷி கூறியது உண்மைதான்.
இதையும் படிங்க:என் வாழ்க்கையிலே ஒவ்வொரு நாளும் நானா செதுக்கினது - தங்கமங்கை மானசி ஜோஷி
36 வருடங்களுக்கு பின் வெண்கலம் வென்ற இரண்டாவது இந்தியர்!
உலக பேட்மிண்டன் பிரிவில் மகளிர் பிரிவில் சிந்து அசத்தியதை போல, ஆடவர் ஒற்றையர் பிரிவில் கெத்துகாட்டியவர் சாய் பிரனீத். ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் அவர் ஜப்பானின் முதல்நிலை வீரரான கென்டோ மோமோடாவிடம் 13-21, 8-21 என போராடி தோல்வி அடைந்ததால் அவருக்கு வெண்கலப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. இருப்பினும், இந்தத் தொடரில் 36 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கலம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
ரெட்டை கதிரே.... பேட்மிண்டனில் இரட்டையர் பிரிவில் அசத்திய இந்திய ஜோடி!
2019ஆம் ஆண்டு பேட்மிண்டனில் பி.வி. சிந்து, சாய் பிரனீத், மானசி ஜோஷிக்கு மட்டுமின்றி சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி / சிராக் ஷெட்டி ஆடவர் இணைக்கும் சிறந்த ஆண்டுதான். பாங்காக்கில் நடைபெற்ற தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இவர்கள், முன்னாள் சாம்பியன் சீனாவின் லி ஜூன்ஹுய் / லியு யுச்சென் (Li Junhui / Liu Yuchen) ஜோடியை 21-19, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று தங்கத்தைக் கைப்பற்றினர்.
சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி / சிராக் ஷெட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் உலக சூப்பர் 500 தொடரில் இந்தியாவுக்கு மட்டுமின்றி, இந்த ஜோடிக்கும் கிடைத்த முதல் தங்கம் இதுதான். இதன் பலனாக, இந்த ஜோடி 2019ஆம் ஆண்டில் bwf சார்பில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான பட்டியலில் இந்தியா சார்பில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இவர்களது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.