ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ தன்னை கொலைவெறியுடன் தாக்கப்போவதாக மிரட்டிய சம்பவம் பற்றி விவரித்துள்ளார் பிரபல அமெரிக்க டிவி தொகுப்பாளர் டேவிட் லெட்டர்மேன்.
இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் 'டீஸஸ் அண்ட் மேரோ' டிவி நிகழ்ச்சியில் நிகழ்ந்த அந்த சம்பவம் குறித்து டேவிட் லெட்டர்மேன் கூறியதாவது:
பிரபல முன்னணி நடிகை ஒருவரை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது, நீங்கள் இயக்குநர் டேரண்டினோவிடம் டேட்டிங்கில் ஈடுபட்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. அது உண்மையில்லை தானே என்று கேட்டேன். ஆனால் அந்த நடிகை தான் டேரண்டினோவை டேட்டிங் செய்வது உண்மை எனக் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தது போல் பாசங்கு செய்தேன். ஒரு முன்னணி நடிகை எப்படி இந்த சின்ன இயக்குநரை டேட்டிங் செய்கிறார் என வியந்தேன்.
சில நாட்கள் கழித்து போனில் எனக்கு அழைப்பு விடுத்த டேரண்டினோ, பேசத் தொடங்கியபோதே திட்டித்தீர்த்தார். தொடர்ந்து பேசிய அவர், 'நீ சாகும் வரை உன்னை அடிக்கப்போகிறேன். என்னைப் பற்றி நீ எப்படி பேசலாம்? இதற்காகவே நியூயார்க் வந்து உண்ணை கொலைவெறியுடன் தாக்குவேன்' எனக் கத்தினார். அப்போது அவரிடம் சில விநாடிகள் லைனில் காத்திருங்கள், அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் போனில் அழைக்கிறார். அவருடனும் இணைந்து பேசலாம் என்றேன்.
நிகழ்ச்சி தயாரிப்பாளர் போன் அழைப்பில் இணைந்த பிறகு, மறுபடியும் என்னை மிரட்டும் தொணியில் பேசினார். பின்னர், நீங்கள் என்னை எவ்வாறு தாக்க விரும்புகிறீர்கள்? உங்கள் கைகளை வைத்தா? அல்லது பேஸ்பால் மட்டையை வைத்தா? என்று டேரண்டினோவிடம் கேட்டேன். அதற்கு அவர், 'ஒரு பேட் வாங்கிக் கொடு, அதை வைத்து அடித்து நொறுக்குறேன்' என்று உஷ்னத்தின் உச்சியில் பேசினார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு தனது 'இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்' படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவரை சந்திக்க நேர்ந்தது. வழக்கமாக நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் அதில் பங்குபெறும் பிரபலங்களைப் பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது. ஆனால் மேக்கப் அறையில் இருந்த டேரண்டினோவை போய் பார்த்தேன். அங்கு அவர் தனது செய்தி தொடர்பாளருடன் இருந்தார்.
அப்போது என்ன மிரட்டிய சம்பவம் பற்றி நினைவுப்படுத்தி, பேஸ்பால் மட்டை தயாராக இருப்பதாக தெரிவித்தேன். பின்னர் இவ்வாறு என்னிடம் நீங்கள் நடந்துகொண்டதற்கு என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றேன். அவருக்கு விருப்பமில்லை என்றாலும் செய்தித்தொடர்பாளர் கூறியதற்காக மன்னிப்பு கேட்டார் என்று நினைவுப்படுத்தியுள்ளார் டேவிட் லெட்டர்மேன்.