தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (டிச.28) நடைபெற்றது. அதில் பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், ”தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சங்கத்தின் சார்பில் எட்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். விரைவில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்.
கோரிக்கைகள்
திரையரங்குகளில் 100 விழுக்காடு மக்களை அனுமதிக்க வேண்டும். தற்போது உள்ள சூழலில் ஜிஎஸ்டி வரியுடன் 8 விழுக்காடு உள்ளாட்சி வரியும் சேர்வதால், திரையரங்குகளை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. திரையரங்கு புதுப்பித்தல் உரிமையை ஓராண்டில் இருந்து மூன்று ஆண்டுகளாக மாற்றித்தர வேண்டும்.
மாஸ்டரும், ஈஸ்வரனும்!
ஆந்திரா போன்ற மாநிலங்களில் கரோனாவால் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுங்கு பல்வேறு சலுகைகள் அரசு அறிவித்தது போல், தமிழ்நாடு அரசும் சலுகைகள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் கட்டாயம் திரையரங்குகளில் வெளிவரும். சிம்புவின் ஈஸ்வரன் படமும் திரையரங்குகளில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.