மும்பை: முதல் வெப்சீரிஸின் அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பிஸியாக நடித்து வரும் சமந்தா 'தி ஃபேமிலி மேன் சீசன் 2' வெப் சீரிஸ் மூலம் இணையத்தொடரிலும் அடியெடுத்து வைக்கிறார். தனது முதல் வெப் சீரிஸ் படப்பிடிப்பை முடித்த கையோடு கடைசி நாளில் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் தனது அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், 'தி ஃபேமிலி மேன்' சீசன் 2 செட்டின் ஒவ்வொரு நாளும் மறக்க முடியாததாக அமைந்தது. நான் இதுவரை நடித்திராத வகையில் மிகவும் வித்தியாசமாக அமைந்திருந்த கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்த இயக்குநர் ராஜ் மற்றும் டிகேவுக்கு நன்றிகள்.
நேற்றுதான் எதுவும் தெரியாமல் ஒரு இருட்டறையில் அமர்ந்து எனது கேரக்டருக்கான உலகை என்னால் முடிந்தவரை கண்டறிய தொடங்கியதுபோல் இருந்தது. தற்போது கடைசி நாள் படப்பிடிப்பில் பெருமையாக சொல்வேன், நிச்சயமாக நான் சொதப்பவில்லை’ என பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பான தி ஃபேமிலி மேன் முதல் சீசனில் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் - பிரியாமணி ஆகியோர் பிரதான கேரக்டரில் நடித்திருந்தனர். ஆக்ஷன் கலந்த குடும்ப கதையாக அமைந்திருந்த இந்தத் தொடர் 10 பகுதிகளாக ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்தி மொழியில் வெளியான இத்தொடரின் இரண்டாவது சீசனில் சமந்தா பிரதான கேரக்டரில் நடித்து வந்த நிலையில், தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.