நடிகர் மனோஜ் வாஜ்பாய், நடிகைகள் பிரியாமணி, சமந்தா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த தொடர் 'தி ஃபேமிலி மேன் 2'. அமேசான் ப்ரைமில் 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடரின் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை இரட்டை இயக்குநர்கள் ராஜ் - டி.கே ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இந்தத் தொடரில் ராஜி என்னும் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். இதன் மூலம் அவர் வெப் சீரிஸில் அறிமுகமாகிறார். 'தி ஃபேமிலி மேன் 2' தொடர் அமேசான் ப்ரைமில் ஜூன் 4ஆம் தேதி வெளியானது. தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாகச் சித்தரித்து ட்ரெய்லர் வெளியானதில் இருந்து தமிழ்நாட்டில் இந்தத் தொடரை தடை செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சியினர் குரல் எழுப்பிய வண்ணம் உள்ளனர். இயக்குநர் சேரனும் இந்தத் தொடரை தான் புறக்கணிப்பதாகத் தனது சமூகவலைதளத்தில் கூறியுள்ளார்.
தற்போது இந்தத் தொடரில் ஈழத்தமிழராக ராஜி கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா தனது கதாபாத்திரம் தொடர்பான விவரங்களை இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். அதில்," 'தி ஃபேமிலி மேன் 2' இணையத் தொடருக்கான விமர்சனங்களை படிக்கும்போது என் மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது. இந்தத் தொடருக்காக இயக்குநர்கள் என்னை அணுகிய போது, அக்கதாபாத்திரத்தை உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையோடு வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஈழப் போரில் பெண்கள் குறித்த கதைகள் உள்பட தமிழர் போராட்டத்தின் ஆவணப் படங்களை படக்குழுவினர் எனக்குக் காண்பித்தார்கள்.