இயக்குநர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையத் தொடராக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணண் நடித்துள்ளார்.
இத்தொடருக்கு 'குயின்' என்று பெயர் வைத்துள்ளார். இதில் முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் இந்திரஜித் நடித்துள்ளார். வெப் சீரிஸ் தொடராக வெளிவரவிருக்கும் குயின், 11 எபிசோடுகளாக எம்எக்ஸ் பிளேயர் ஆன்லைன் ஸ்டீரிமிங் தளத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்தத் தொடரில் கிடாரி படப்புகழ் பிரசாத் முருகேசன் மற்றொரு இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு இதன் ட்ரெய்லர் வெளியானது. அதில் பதினைந்து வயதில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததில் தொடங்கி மக்களின் ராணியாக மாறியதுவரையிலான சம்பவங்களை விவரிக்கிறது.
இதுகுறித்து ரம்யா கிருஷ்ணன் கூறுகையில், நான் பின்பற்றும் ஒரு பெண்மணி, தன் இயல்பிலிருந்து வெளிவந்து, இந்த உலகை எப்படி வெற்றி கொண்டார் என்பது என்னை மிகவும் கவரவே, நான் இந்த வேடத்தை ஏற்க முடிவு செய்தேன் என்றார்.
கெளதம் வாசுதேவ் மேனன் கூறுகையில், ‘சில கதைகள் சொல்லியே ஆகவேண்டும் என்ற தகுதியைப் பெற்றிருக்கும். அத்தகைய கதைதான் இது. மொழிகள், மற்றும் நாடுகள் என்ற சிறிய எல்லைகளுக்குள் சிக்காமல் இந்தக் கதை உலகளாவிய ஏற்புத்தன்மை கொண்டது. இந்தத் தொடரை உருவாக்க நாங்கள் மிகவும் உழைத்திருக்கிறோம். 'குயீன்' இணையதளத் தொடர் டிசம்பர் 14 முதல் ஒளிபரப்பாகும். இதில் நடித்த ஒவ்வொருவருமே தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்’ என்றார்.