சின்னத்திரையில் மிகப் பிரபலமாக ஒளிப்பரப்புசெய்யப்பட்ட மெட்டி ஒலி மெகாத் தொடரை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் இன்றுமுதல் ஒளிபரப்பு செய்யவுள்ளது.
கரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இதனால் அனைத்துவித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்படும் மெகாத்தொடர்கள் அனைத்தும் ஒளிபரப்பு செய்யமுடியாமல் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மெகாத் தொடர்களுக்கு முன்னோடியாகவும் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் தொடர்கள் தற்போது மறு ஒளிப்பரப்பு செய்யப்பட்டுவருகிறது. தூர்தர்ஷனில் ஏற்கனவே 'ராமாயணம்', 'மகாபாரதம்' ஒளிபரப்ப செய்யப்பட்டுவருகிறது. இதனைத்தொடர்ந்து இன்றுமுதல் 90ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோவான 'சக்திமான்' மதியம் 1 மணி முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதனிடையே பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தமிழ்நாட்டு இல்லத்தரசிகளைக் கவர்ந்த 'மெட்டி ஒலி' தொடரை இன்று (ஏப்ரல் 1) மதியம் 1 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
மெட்டி ஒலி தொடரின் ஒப்பனிங் பாடலான 'அம்மி... அம்மி... அம்மி மிதிச்சு... அருந்ததி முகம் பார்த்து...' பாடலுக்கு நடன இயக்குநர் சாந்தி ஆடும் நடனம் 90ஸ் கிட்ஸ்களின் மனத்தில் பசுமையான நினைவாகும். கூட்டுக்குடும்பங்கள், சக மனிதர்களின் வாழ்வியலை சின்னத்திரையில் அழகா காட்டியிருப்பார் மெட்டி ஒலியின் இயக்குநர் திருமுருகன் (கோபி).
இது குறித்து சமூக வலைதளத்தில் 90ஸ் கிட்ஸ் சிலர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். அதில், சில தொடர்கள் மிகவும் சுவாரஸ்யமான ரசிக்கத்தக்கவையாக இருக்கும். மெட்டி ஒலிக்கு 90ஸ் கிட்ஸ் ஆதரவு தருகிறோம். ஆனால் சக்திமான் தொடரும் அதே நேரத்தில் ஒளிப்பரப்பு செய்ப்படுகிறது. இதனால் 90ஸ் கிட்ஸுக்கும் அம்மாக்களுக்கும் இன்று மதியம் முதல் போர் ஆரம்பிக்கும் எனப் பதிவிட்டுள்ளனர்.