மும்பை: வெப்சீரி்ஸ் தொடருக்காக போல் நடனம் ஆடும் பயிற்சியில் ஈடுபட்டபோது காயம் அடைந்துள்ளார் நடிகை மந்தனா கரிமி.
பிரபல மாடலும், நடிகையுமான மந்தனா கரிமி தற்போது தி காசினோ என்ற வெப்சீரிஸ் தொடரில் நடித்து வருகிறார். இதில் இடம்பெறும் காட்சிக்காக போல் நடன பயிற்சி மேற்கொண்டபோது காயம் அடைந்துள்ளார். இதையடுத்து அந்தக் காயத்துடனே போல் நடனம் தொடர்பான காட்சியில் நடித்துள்ளார்.
இதுகுறித்து மந்தனா கரிமி கூறியதாவது:
போல் நடன காட்சிக்காக இரண்டு நாள்கள் பயிற்சி மேற்கொண்டேன். போல் நடனத்தை தொழில்முறையாகக் கொண்டவர்போல் நடனம் ஆடாவிட்டாலும் என்னால் முடிந்தளவு முயற்சி மேற்கொண்டேன்.
இதற்கான பயிற்சியில் ஈடுபட்டபோது உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு போல் நடனம் தொடர்பான காட்சிகளில் நடித்து முடித்தேன். காயம் இருந்த பகுதிகளில் கூடுதலாக மேக்கப் செய்து, அவை வெளியே தெரியாதவாறு மறைத்து படப்பிடிப்பில் நடனமாடினேன். எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தது என்றார்.
கோடிகள் புரளும் கேசினோ வைத்திருக்கும் பணக்காரரின் மகனான விக்கி, அதன் வாரிசு ஆகிறார். செல்வந்தர்களால் சூழப்படும் அந்த கேசினோவில் வெளி உலகுக்கு தெரியாமல் நடைபெறும் சந்தேகங்களை கூறும் விதமாக தி கேசினோ வெப்சீரிஸ் தொடர் அமைந்துள்ளது.
இந்தத் தொடரில் கரண்வீர் போக்ரா, சுதாண்சு பாண்டே, ஐந்திரித்தா ரே, தண்வீர் சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஹர்திக் கஜ்ஜார் இயக்கி வரும் இத்தொடர் ஸீ5 ஆன்லைன் தளத்தில் ஜூன் 12ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.
இந்திப் படங்களில் நடித்து வரும் மந்தனா கிரிமி, பிக் பாஸ் 9 மூலம் பிரபலமானார். சினிமா, டிவியை தொடர்ந்து தற்போது வெப்சீரிஸ் தொடரில் தலைகாட்டவுள்ளார்.