சென்னை:சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைப்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் பணியாற்றி வந்த பணியாளர்கள் 6 பேருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தபட்டனர்.
தமிழ்நாட்டில் தற்போது முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில், எந்தவித படப்பிடிப்பும் மே 31ஆம் தேதி வரை நடைபெறாது என ஃபெப்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி அறிவித்து இருந்தார். மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பில் இருந்த ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இரு வாரங்களுக்கு படப்பிடிப்பு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த விதிமுறைகளை மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி மீறியுள்ளது.
பிக்பாஸ் நிகிழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து, பூந்தமல்லி உதவி கமிஷனர் சுதர்சன், தாசில்தார் சங்கர் உள்ளிட்ட வருவாய் துறையினர் பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் அரங்கிற்கு சென்று நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக அந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிர்வாகத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.