சென்னை:இந்தியா தொழில் கூட்டமைப்பு நடத்தும் தக்ஷின் தென்னிந்திய மீடியா மற்றும் பொழுதுபோக்கு கருத்தரங்கு ஏப்ரல் 9, 10 அன்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன், லிஸி, சுஹாசினி, தயாரிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய சுஹாசினி, “உலகம் முழுவதும் தென் இந்திய படங்களை பார்த்து கொண்டாடினார்கள். அது எப்படி என்பதை எடுத்து கூறுவது தான் இந்த கருத்தரங்கம். சினிமாத்துறையில் இப்பொழுது பெண்கள் தான் அதிகம். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பெண்கள் தான் மொத்த பொறுப்பையும் ஏற்று கொண்டு பார்த்துகொள்கிறார்கள்.
சினிமாவை கற்றுக்கொள்ளும் தளமாக இந்த இரண்டு நாள் கருத்துரங்கு இருக்கும். தொடக்க விழாவில் ராஜமவுலி, மணிரத்னம், பகத்பாசில், ஜெயம்ரவி, சிவராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். திரை உலகில் பெண்களின் பங்கு குறித்தும் இதில் பேசப்பட உள்ளது.
சினிமாவில் சோசியல் மீடியா குறித்தும் இதில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. சினிமாவில் வெற்றிகரமாக இயங்கும் முன்னணி நபர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்” என கூறுகின்றனர்.