ஆஸ்கர் விருது வென்றவரும் டைட்டானிக் புகழ் நடிகையுமான கேட் வின்ஸ்லெட், கடந்த 2011ஆம் ஆண்டு போலன்ஸ்கியுடன் இணைந்து கார்னேஜ், 2017ஆம் ஆண்டு உட்டி ஆலனுடன் இணைந்து வொண்டர் வீல் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்த இரு இயக்குநர்கள் மீது பல ஆண்டு காலமாக பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இரு இயக்குநர்களும் ஹாலிவுட்டில் இவ்வளவு காலமாக உயர்வாக நடத்தப்பட்டு வந்திருப்பது அவமானத்திற்குரியது என கேட் வின்ஸ்லெட் தற்போது மனம் திறந்து தெரிவித்துள்ளார்.
தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் "உட்டி ஆலன், ரோமன் போலன்ஸகியுடன் நான் ஏன் பணிபுரிந்தேன் எனத் தற்போது வருந்துகிறேன். இவர்கள் இருவரும் திரையுலகில் உயரிய இடங்களில் இருந்து வந்துள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. இது மிகவும் அவமானத்திற்குரியது" என கேட் வின்ஸ்லெட் தெரிவித்துள்ளார்
மேலும் இதுபோன்ற சம்பவங்களை அறிந்தும் தான் அவர்களது படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதால் தன் மீதும் தவறு உள்ளது எனவும் கேட் வின்ஸ்லெட் ஒப்புக் கொண்டுள்ளார்.
"நான் அவர்கள் இருவருடனும் பணிபுரிந்ததற்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். காலத்தை என்னால் மாற்றியமைக்க முடியாது. நான் இதற்காக வருந்துகிறேன்" என வின்ஸ்லெட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக #MeToo இயக்கம் முன்னெடுக்கப்பட்டு பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, ரோமன் போலன்ஸ்கி, உட்டி ஆலன் ஆகிய இரு இயக்குனர்கள் மீதான பாலியல் புகார்கள் மீண்டும் கவனம் பெற்றன.
’மேன்ஹேட்டன்’, ’ஆனி ஹால்’, ’மிட்நைட் இன் பேரிஸ்’, ’விக்கி க்றிஸ்டினா பார்சிலோனா’ ஆகிய பிரபல படங்களை இயக்கிய உட்டி ஆலன் மீது அவரது வளர்ப்பு மகள் டிலான் ஃபாரோ, 1990களின் ஆரம்பக் காலக்கட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், 2014ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியிலும் அவர் தனது புகார்களை மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்திருந்தார். அதேபோல், ’ரோஸ்மேரி'ஸ் பேபி’, ’சைனாடவுன்’, ’தி பியானிஸ்ட்’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களை இயக்கிய போலன்ஸ்கி மீது, 1977ஆம் ஆண்டில் 13 வயது சிறுமி சமந்தா கெய்மர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு 42 நாள்கள் சிறையில் இருந்த போலன்ஸ்கி, தனது தண்டனைக் காலம் முடியும் முன்னரே பிரான்ஸுக்கு தப்பியோடியதும், இவ்வழக்கு இன்று வரை தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :டிசி ரசிகர்களுக்கு ஷாக்! மீண்டும் தள்ளிப்போன 'வொண்டர் வுமன்' ரிலீஸ்!