லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகை ஜேன் ஃபோன்டா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிகழ்த்திய, வெள்ளிக்கிழமை பரப்புரையில் அடுத்த 10 ஆண்டுகளில் கார்பன் உமிழ்வை குறைக்க கோரி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
இந்த பரப்புரையில் 'ஜோக்கர்' படம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜோகின் பீனிக்ஸ் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார். இவர் பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெறவிருக்கும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
பிரபல டிவி தயாரிப்பாளர் நார்மன் லியர் உள்ளிட்ட சிலரும் இந்தப் பரப்புரையில் பங்கேற்றனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சிட்டி ஹால் முன்னிலையில் பேரணியாக சென்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வலிறுத்தி போராட்டம், பரப்புரையில் ஈடுபட்டு வரும் ஜேன் ஃபோன்டா ஐந்து முறை கைது செய்யப்பட்டார். இதுவரை 14 முறை வாஷிங்டன் நகரில் இந்த பரப்புரையை மேற்கொண்ட ஃபோன்டா, தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இதனை மேற்கொண்டார்.