இளையராஜா இந்த பெயரை தமிழ் மக்களால் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. கவி போற்றும் காலத்தில், புலவர்கள் தான் இயற்றும் பாடலில் போற்றும் தலைவனை, “பாட்டுடைத்தலைவன்” என்பார்கள். இந்த இன்னிசை தீரனான பண்ணைபுரத்துக்காரன் பாட்டுக்கே தலைவனான். மக்களின் மனம் அறிந்து மண்ணை ஆண்டவர்கள் இங்கு பலர் உண்டு, ஆனால் மண்ணை அறிந்து மக்கள் மனங்களை கொள்ளை கொண்டவர் இளையராஜா மட்டுமே. இது கிராமம் என்று சொல்லி கடந்து செல்லும் மக்களின் மத்தியில், அம்மண்ணின் மக்களின் வாழ்வியலை இசை கொண்டு உலகறியச் செய்தவர். வயல்வெளி பாடல்களைப் பளிங்கு சாரீரமாக அனைவருக்கும் கடத்தியவர் இந்த ராஜா.
நம்மை மகிழ்ச்சியில் தூக்கிச் செல்வார். 'உனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்..!' என்று சொல்லும் ஒற்றை இசை அகராதி அவர். மொழி தெரியாத இந்தி பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த 1976 காலகட்டத்தில், 'அன்னக்கிளி' படத்தில் 'மச்சான பாத்தீங்களா'... எனும் பாட்டு மூலம் ஒட்டுமொத்த இசையுலகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்தவர். ஒவ்வொரு பாடல்களுக்கும், பின்னணி இசை மூலம் படத்திற்கும் உயிர் கொடுத்த தாயுமானவர். ராஜா ஒரு அனிச்சை அட்சயம். குள்ள உருவம்தான் நம்மைக் கொள்ளை அடித்து வைத்திருக்கிறது. இசையில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. அத்தனை வகைகளையும் கலை கெடுக்காமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ் திரைத்துறையில் பெரும் இசைப்புரட்சியைச் செய்த அன்னக்கிளியில் குயில் கூவ ஆரம்பித்தது அந்த குயில் இன்று வரை கூவுவதை நிறுத்தவே இல்லை.
மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா என எளிய மக்களின் வாழ்க்கையைப் பாசாங்கு இல்லாமல் படமாக்கும் இயக்குநர்களின் படங்களில் இளையராஜா கொடுத்த பாடல்களும், மெல்லிய உணர்வுகளைக் கடத்தும் பின்னணி இசையும் காலம் கடந்தும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. பாலுமகேந்திரா இயக்கிய 'வீடு' படத்தில், கட்டுமானத்தில் இருக்கும் புதிய வீட்டை முதியவர், சுவரைத் தடவிக் கொண்டு ஆனந்த பூரிப்புடன் சுற்றிப் பார்க்கும் வசனமில்லாத காட்சியில் புல்லாங்குழல், வயலின் மூலம் இளையராஜா கொடுத்த பின்னணி இசை ஒன்று மட்டும் போதும், அவர் பாடல்களில் மட்டுமல்ல... பின்னணி இசையிலும் ராஜா என்பதை நிரூபிப்பதற்கு. தாரை தப்பட்டை, பழசிராஜா ஆகிய படங்களுக்குப் பின்னணி இசைக்காக இரண்டு தேசிய விருதுகளைக் கொடுத்து, மத்திய அரசு பெருமை தேடிக் கொண்டது.