வாஷிங்டன்: ஹாலிவுட் பவுல்வர்ட் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சூப்பர்மேன் தோற்றத்தில் கவர்ந்துவந்த கிறஸ்டோபர் டென்னிஸ் மறைந்தார். அவருக்கு வயது 52.
கோலிவுட் சினிமாவுக்கு கோடம்பாக்கம், பாலிவுட் சினிமாவுக்கு மும்பை என்பது போல் ஹாலிவுட் சினிமாவுக்கு தாய்வீடாக லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் திகழ்கிறது. இங்குள்ள ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்டூடியோக்களில்தான் ஹாலிவுட் சினிமாக்கள் படமாக்கப்பட்டுவருகின்றன.
கிழக்கு - மேற்கு பகுதியை இணைக்கும் தெருக்களில் அமைந்திருக்கும் ஹாலிவுட் பவுல்வர்ட் என்ற இடத்துக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளை, சூப்பர்மேன் தோற்றத்தில் கவர்ந்தவர் கிறிஸ்டோபர் டென்னிஸ்.
லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள சான் ஃபெர்னான்டோ வேலி பகுதியில் வசித்துவந்த இவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் ஹில்ஸை சுற்றிப் பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக சூப்பர்மேன் கிறிஸ்டோபர் டென்னிஸை பார்த்து, அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்வது வாடிக்கையாக நடக்கும் நிகழ்வாக இருந்தது.
சூப்பர்மேன் தோற்றத்தில் கிறிஸ்டோபர் டென்னிஸ் கட்டுமஸ்தான உடல் அமைப்பு, உயரம், கருமையான தலை முடி என அச்சு அசல் சூப்பர்மேனாக காட்சியளிக்கும் கிறிஸ்டோபர், தனது தோற்றத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், அமெரிக்காவில் புகழ் பெற்ற ஜிம்மி கெம்மேல் லைவ் ஷோ என்ற டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
இல்லிநோஸ் நகரில் அமைந்துள்ள தி சூப்பர் மியூசியம் என்ற சூப்பர்மேனுக்கான அருங்காட்சியகம் சார்பில் கிறிஸ்டோபர் டென்னிஸ் மறைவுக்காக வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், பல ஆண்டுகளாக எங்களுக்கு கிறிஸ்டோபர் டென்னிஸை தெரியும். எங்களது நிர்வாகத்துக்கு பல வகைகளில் ஆதரவு அளித்த அவர், சூப்பர்மேன் கொண்டாட்டத்தில் தவறாமல் கலந்துகொள்வார்.
அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்துள்ளார். தற்போது அவரது ஆத்மா சாந்தியடையும் என நம்புகிறோம். அவரை நல்லபடியாக பார்த்துக் கொண்டு ஆதரவு அளித்தவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:மார்வல் திரைப்படங்கள் பற்றி மட்டமாக பேசியதற்கு மார்டின் ஸ்கார்சசி விளக்கம்!