மும்பை: கிராமி விருதை வழங்க இருக்கும் பிரபலங்களில் பட்டியலை ரெக்கார்டிங் அகாதமி வெளியிட்டுள்ளது.
இசை உலகின் ஆஸ்கர் விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் அமெரிக்காவிலுள்ள ரெக்கார்டிங் அகாதமியால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதையடுத்து இந்த ஆண்டு 62ஆவது கிராமி விருதுகள் வழங்கப்படவுள்ளன.
அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமிலிருந்து இசை கலைஞர்கள் இந்த விருது நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிலையில், சிறந்த பாடல் தொடங்கி சிறந்த இசைப் படம் வரை பல்வேறு பிரிவுகளில் விருதுகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து விருதுகளை வெற்றியாளர்களுக்கு வழங்கவிருக்கும் பிரபலங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராமி விருது வென்றவர்கள், தற்போது விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்கள் என இடம்பிடித்துள்ளனர்.
சிறந்த நகைச்சுவை ஆல்பத்துக்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ஜிம் கஃப்பிகன், ட்ரெவர் நோவா, கடந்த ஆண்டு கிராமி வென்ற சிந்தியா எரிவோ, துவா லிபா, பில்லி போர்டர், ஸ்மோக்கி ராபின்சன், ஷானியா ட்வைன், கெயித் அர்பன், ஸ்டேவி ஒன்டர் உள்ளிட்டோர் விருது வழங்குவோர் பட்டியலில் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள கர்லைல் , தன்யா டக்கர் ஆகியோர் விருதை வழங்குவதுடன், மேடையில் இசை நிகழ்ச்சியும் நிகழ்த்தவுள்ளனர்.
62ஆவது கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் அமெரிக்க நேரப்படி ஜனவரி 26ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல பாடகர் அலிசியா கீஸ் தொகுத்து வழங்கவுள்ளார்.