தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'காட்மேன்' வெப்சீரிஸுக்கு எதிராக வழக்குப் பதிவு - கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்! - Chennai news

சென்னை: 'காட்மேன்' வெப்சீரிஸுக்கு எதிரான வழக்குப் பதிவு கருத்துச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காட் மேன்
காட் மேன்

By

Published : Jun 2, 2020, 7:25 PM IST

ஜெயம் ரவி நடித்த ‘தாஸ்’, விஜய் ஆண்டனி நடித்த ’தமிழரசன்’ ஆகிய படங்களை இயக்கியவர் பாபு யோகேஸ்வரன். இவர் தற்போது டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர்களை வைத்து, 'காட்மேன்' என்னும் இணைய தொடரை இயக்கியுள்ளார்.

இத்தொடர் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான தொடரின் டீசர் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என பல இந்து அமைப்பினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

தற்போது 'காட்மேன்' படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், இந்தியச் சூழலில் காட்சி ஊடகத்தின் படைப்புச் சுதந்திரம் முற்றிலும் கேள்விக்குள்ளாகியிருக்கும் நிலையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிரான ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் சூழலில் இருக்கிறோம்.

கருத்துச் சுதந்திரத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் சில இங்கே கொடுத்துள்ளோம். சுமார் 380 நிமிடங்கள் கொண்ட இக்கதைத் தொடரின் முன்னோட்டமாக அமைந்த அந்த ஒரு நிமிட டீஸரில் இடம் பெற்றிருக்கும் சில வசனங்கள் தங்கள் சமூகத்தை அவமதிப்பதாகக்கூறி தமிழ்நாடு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு சில அதிதீவிர பிராமண சிந்தனையாளர்களால் தூண்டிவிடப்பட்டு இத்தொடரைத் தடைசெய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் காவல் நிலையங்களில் புகார் அளித்திருக்கிறார்கள்.

காட்மேன் தொடரின் தயாரிப்பாளரை ஒரு கிறிஸ்தவ கைக்கூலி என்று சித்தரிக்கும் வேலையை செய்ததோடு, இத்தொடரின் தயாரிப்புக்குப் பின்னால் பெரும் மதக்கலவரத்தைத் தூண்டிவிடும் சதி இருப்பதாகவும் வதந்தியைப் பரப்பியிருக்கிறார்கள். கோயமுத்தூர் கோயிலில் பன்றிக்கறியை வீசி மதக்கலவரத்தைத் தூண்டமுயன்ற ஹரி என்னும் இந்து ஆசாமி இவர்தான் என்று இளங்கோவின் படத்தை சமூகவலைத்தளங்களில் வதந்தியை பரப்புகின்றனர்.

குறிப்பிட்ட அந்த டீஸரில் இடம்பெற்றிருந்த வசனங்களின் உண்மைத்தன்மை என்ன, ஒட்டுமொத்த வெப்சீரிஸின் கதை என்ன, கதாபாத்திரங்களின் தன்மை என்ன என்பது பற்றியெல்லாம் எந்த புரிதலும் இல்லாத நிலையில், இப்படி ஒரு வெப்சீரிஸ் பிராமண சமூகத்துக்கும் இந்து மதத்துக்கும் எதிரானது என்னும் கருத்தை உருவாக்கி, அந்த படைப்பையே தடைகோரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

செல்வாக்கு மிக்க தனி நபர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த ஊடக உலகமும் திரளவேண்டிய ஒரு அபாயகரமான சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. இவர்களின் இந்த பயங்கரவாத நடவடிக்கை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19-1-A (1949) நமக்கு அளித்திருக்கும் கருத்துச் சுதந்திர உரிமையை முற்றிலுமாகப் பறிக்கிறது.

இவர்களின் இந்நடவடிக்கை அனுமதிக்கப்பட்டு இந்த ‘காட்மேன்’ வெப்சீரிஸ் ஒருவேளை முற்றிலுமாக தடைசெய்யப்படுமேயானால், நம் படைப்புச் சுதந்திரமே கேள்விக்குறியாகி, எதிர்காலத்தில் இப்படி யார் வேண்டுமானாலும் தலையிட்டு எந்த படைப்பையும் திரைக்கு வரும் முன் தடுத்து நிறுத்திவிடலாம் என்னும் நிலை ஏற்படும்.

இதைத் தடுக்கும் விதமாகவும், ’காட்மேன்’ வெப்சீரிஸ் வெளியாவதற்கு உறுதுணையாகவும், இந்தியாவில் ஜனநாயகச் சூழலைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் முயற்சியாகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பாளர்களின் சதியையும் மூர்க்கத்தையும் தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அவ்வகையில் இந்தக் கோரிக்கை விண்ணப்பத்தையே ஒரு கையெழுத்து இயக்கமாக மாற்றி, இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் பிரதமரின் அலுவலகத்துக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்வோம். இந்திய சினிமா மற்றும் ஊடக சுதந்திரத்தைக் காப்போம்" எனக் கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details