இந்திய ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற 'சேக்ரட் கேம்ஸ்' சிறந்த டிராமா பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு தொடரான 'லஸ்ட் ஸ்டோரில்' இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் நடித்திருந்த நடிகை ராதிகா ஆப்தே சிறந்த நடிகை பிரிவில் பரிந்துரை பட்டியலில் உள்ளார்.
'சேக்ரட் கேம்ஸ்', 'லஸ்ட் ஸ்டோரிஸ்' ஆகிய இரு தொடர்களையும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ளார். இதையடுத்து எம்மி விருதுகளில் இவை பரிந்துரைப்பது தொடர்பான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தொடர்களை தவிர்த்து 'தி ரீமிக்ஸ்' தொடர், ஸ்கிரிப்ட் செய்யப்படாத பொழுதுபோக்குப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இயங்கிவரும் இன்டர்நேஷன் அகாதெமி ஆஃப் டிவி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் எம்மி விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இதர பொழுதுபோக்கு தொடர்களின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் இதில் இந்திய தொடர்கள் விருது பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 11 பிரிவுகள், 21 நாடுகள், 44 பிரிவுகள் என பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மெனி, ஹங்கேரி, இந்தியா, இஸ்ரேல், நெதர்லாந்து, போர்ச்சுகல், கத்தார், சிங்கப்பூர், தென் ஆப்பரிக்கா, தென் கொரியா, துருக்கி, அமெரிக்க, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.