மும்பை: எனக்கு பேய்ன்னா பயம்தான். ஆனால் பேயாக நடிக்கிறதை நினைத்தால் சிரிப்புதான் வருது என்று நடிகை ஈஷா சோப்ரா கூறியுள்ளார்.
திகில் கலந்த நகைச்சுவை பாணியில் அமைந்திருக்கும் பூட்டியாகிரி என்ற வெப் சீரிஸ் தொடர் எம்எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பாகிறது. இதில், சுமித் வியாஸ், விஷ்வாஜோய் முகர்ஜி, ஈஷா சோப்ரா முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
இதையடுத்து இந்தத் தொடரில் நடிக்கும் அனுபவம் குறித்து ஈஷா சோப்ரா கூறியதாவது:
எனக்கு பேய்ன்னா ரொம்ப பயம், ஆனால் பேயாக நடிக்கிறதை நினைத்தால் வேடிக்கையாக உள்ளது. நான் பேய் படங்களே பார்க்கமாட்டேன். இதன் காரணமாகவே திகில் தொடரில் நடிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
சிறுவயதில் எனது மாமா இரவு நேரங்களில் ஏராளமான பேய்க் கதைகள் கூறியிருக்கிறார். இரவில் பேய் வந்து நம் உடல் வழியாக இதயத்துக்கு செல்லும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டு பயத்தில் பல வருடங்கள் முகத்தை காட்டி படுத்ததே இல்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பேய்ப் படம், தொடர்களில் நடிப்பதென்பது உங்களை சுற்றி அமானுஷ்யங்கள் ஏதும் இல்லாமல் நீங்கள் பயப்படுவது போல் நடிப்பது வேடிக்கையான விஷயமாக உள்ளது. படப்பிடிப்பில் நீங்கள் மட்டும் இல்லாமல் சுமார் 50க்கும் மேற்பட்ட டெக்னீஷ்யன்கள் முன்னிலையில் இயற்கைக்கு மாறான ஒன்று நடப்பதாக பயமுறுத்துவது போல் நடிப்பதைப் பார்த்தால் சிரிப்புதான் வருது என்று கூறினார்.
பேய்கள் இருப்பதாகக் கூறப்படும் ரிசார்டுக்கு செல்லும் விருந்தினர்கள் சந்திக்கும் அமானுஷ்யமான நிகழ்வுகளை வைத்து பூட்டியாகிரி வெப் சீரிஸ் தொடர் அமைந்துள்ளது.