தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சித்தி 2'வில் இணைந்த திரைக்கதை நாயகன் பாக்கியராஜ் - ராதிகா சரத்குமார் சித்தி தொடர்

சென்னை: 'சித்தி 2' தொலைக்காட்சித் தொடரில் இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Director K Bhagyaraj

By

Published : Oct 12, 2019, 12:07 PM IST

பகல், இரவு வேளைகளில் பெரும்பாலான பெண்களின் பொழுதுபோக்கு அம்சமாக தொலைக்காட்சி தொடர்கள் விளங்குகின்றன. பெண்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து வயதினருக்கும் ஏற்றவகையில் தயாரிக்கப்படுகின்றன. சில தொலைக்காட்சித் தொடர்கள் திரைப்படங்களுக்கு நிகராகவே எடுக்கப்படுகின்றன.

ஆனால் இந்தத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடி என்றால் அது சித்தி தொடர்தான். காரணம் இந்தத் தொடர் 1999 முதல் 2001 வரை மூன்று ஆண்டுகள் அனைத்து தரப்பு வயதினரையும் கவர்ந்தது. சி.ஜே. பாஸ்கர் இயக்கியிருந்த சித்தி தொடர் பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஹிட்டடித்தது.

அந்தத் தொடரின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் சிவக்குமார், ராதிகா, யுவராணி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகை ராதிகாவின் சின்னத்திரை பயணத்தில் இந்தத் தொடர் ஒரு தொடக்கப் புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து தற்போது சித்தி தொலைக்காட்சித் தொடரின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னையில் சித்தி 2 ஷூட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

சுந்தர் கே விஜயன் இயக்கும் இந்தத் தொடரில் முதல் பாகத்தில் நடித்த சிவக்குமார் கிடையாது என்றும் டேனியல் பாலாஜி மீண்டும் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதே வேளையில் நடிகை பானுப்பிரியாவின் தங்கை நிஷாந்தி, பொன்வண்ணன் உள்பட சிலர் புதிய கதாபாத்திரங்களாக இணைந்துள்ளனராம்.

இந்நிலையில் தற்போது புதிய செய்தியாக பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் 'சித்தி 2' தொடரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்த் திரையுலகத்தில் திரைக்கதையின் நாயகன் என்று போற்றப்படும் பாக்கியராஜ் தற்போது சின்னத்திரையிலும் தனது முத்திரையை பதிக்கவுள்ளார். 'சித்தி 2' தொடரின் புரொமோ காணொலி தீபாவளியன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details