’தி ஜூராசிக் வேர்ல்டு’, ’கார்டியன்ஸ் ஆஃப் கேல்க்ஸி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் க்ரிஸ் பிராட். இவர் தனது கட்டுடல் மற்றும் அதிரடி படங்களால் பெருவாரியான பெண் ரசிகைகளை ஈர்த்து தனக்கென தனி ரசிகைகள் பட்டாளத்தையும் இவர் கொண்டிருக்கிறார்.
அர்னால்டின் மருமகன்
மற்றொரு புறம், புகழ்பெற்ற நடிகர் அர்னால்டு ஸ்வாஷ்நேக்கரின் மகள் கேத்தரின் ஸ்வாஷ்நேக்கரை மணந்துள்ள க்ரிஸ் பிராட் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாக திளைத்து வருகிறார்.
தற்சமயம், க்ரிஸ் பிராட் நடித்துள்ள ஆக்சன் படமான ’தி டுமாரோ வார்’ வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை முன்னதாகப் பார்த்து ரசித்த நடிகர் அர்னால்டு ஸ்வாஷ்நேக்கர், படம் குறித்து பாசிடிவ் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ட்ரெய்லைரைப் பாராட்டிய அர்னால்டு
அர்னால்டின் இந்தப் பாராட்டு குறித்துப் பேசியுள்ள க்ரிஸ் பிராட், “அர்னால்டு என்றுமே பெருந்தன்மையான மனிதர். அவர் எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்துகிறார். இந்த ட்ரெய்லரைப் பார்த்த அவர் தந்தை-மகள், தந்தை-மனைவிக்கு இடையேயான உறவு குறித்து இப்படத்தில் அழகான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாராட்டினார் "என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
’தி டுமாரோ வார்’ ட்ரெய்லர் ஏலியன்ஸ் குறித்த இந்தப் படத்தில் வேற்றுகிரகவாசிகளை பார்க்காமலேயே அவர் எங்களைப் பாராட்டியுள்ளார். அர்னால்டு தனது வீட்டில் இந்தப் படத்தை கண்டுகளிப்பார் என நம்புகிறேன்" எனவும் க்ரிஸ் பிராட் தெரிவித்துள்ளார்.
’தி டுமாரோ வார்’ திரைப்படம் வரும் ஜூலை 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’கணவர்னா இப்படி இருக்கணும்’ - மனைவியைக் கொண்டாடும் ’ஜூராசிக் வேர்ல்டு’ நாயகனைப் பார்த்து மகிழும் ரசிகைகள்!