ஹாலிவுட் உலகில் நட்சத்திரத் தம்பதியாக வலம் வந்த பிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி ஜோடி, 2004ஆம் தொடங்கி ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், பல்வேறு மனகசப்புகள் காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்தனர்.
இவர்களது இந்த முடிவு, உலகம் முழுவதிலுமுள்ள இருவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து சென்ற ஆண்டு இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் மொத்தம் ஆறு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தங்கள் குழந்தைகளின் மீதான உரிமை குறித்து ஏஞ்சலினா ஜோலிக்கும் பிராட் பிட்டுக்கும் இடையே தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது. மேலும், தங்களுக்கு விவாகரத்து வழங்கிய நீதிபதி, பிராட் பிட்டிடம் நிதி உதவிகளைப் பெற்றதாகக் குற்றம் சாட்டியுள்ள ஜோலி, அவரை பதவி நீக்கம் செய்யுமாறும் குரல் எழுப்பியுள்ளார்.
ஜோலியின் இத்தகைய நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்துள்ள பிராட் பிட், தங்களது குழந்தைகளின் மீதான உரிமை குறித்த இந்த விவகாரத்தை இணக்கமாகத் தீர்ப்பதற்கான வழிகளையே ஆராய்ந்து வருவதாக அவரது வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இம்முறை ஜோலி எல்லை மீறி சென்று விட்டார் எனவும், இனி இவ்விவகாரத்தில் பிராட் பிட்டும் சளைக்காமல் போராடப் போகிறார் எனவும் அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.