நம்மூரு முத்தழகு:
தமிழில் அச்சு அசல் கிராமத்து பெண்ணாக 'பருத்திவீரன்' படத்தில் தோன்றி ரசிகர்களின் மனதை கவர்ந்ததுடன், சிறந்த நடிகை தேசிய விருதையும் வாங்கியவர் பிரியாமணி. மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் பிரியாமணி.
அரக்கி வெண்ணிலா:
குறிப்பாக ராவணன் திரைப்படத்தில் 'வெண்ணிலா' கதாபாத்திரத்தில் அசுரத் தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, பிரியாமணியின் திமிரும் தன்னம்பிக்கையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று புகழாரம் சூட்டியிருப்பார்.
தென்னிந்திய மொழிப் படங்களில் ஒரு ரவுண்டு வந்த இவர், சில பாலிவுட் படங்களிலும் தலை காட்டினார். இதையடுத்து கடந்த 2017இல் முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ள பிரியாமணி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கு பச்சையம்மா:
நேற்று இரவு அமேசான் தளத்தில் வெளியான 'தி ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸிலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்பட தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்தில் நடிப்பதற்கு தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். பிரியாமணியின் பிறந்தநாளை முன்னிட்டு நாரப்பா படக்குழுவினர் அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே வெளியிட்டுள்ளனர். அவர் அப்படத்தில் மஞ்சுவாரியர் நடித்த பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இன்று தனது 37 வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகை பிரியாமணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். என்னாதன் சினிமாவுக்கு கொஞ்ச நாள் கேப் விட்டாலும் நாங்க இன்னும் முத்தழகை மறக்கல என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து தங்களது அன்பை வெளிபடுத்தி வருகின்றனர்.