சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "பூவே உனக்காக" சீரியலில் நாயகனாக நடித்த அருண் சமீபத்தில் அந்த சீரியலில் இருந்து விலகினார். அருணுக்கு பதில் அடுத்து நடிக்கப் போவது யார் என்ற கேள்வியும் எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது. இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகர் அசீம், அருணுக்கு பதிலாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கிய அசீம், தொடர்ந்து சன் டிவி-யில் ஒளிபரப்பான "பிரியமானவள்" சீரியலில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். இதையடுத்து மாயா, கடைகுட்டி சிங்கம், தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பகல் நிலவு சீரியலில் சிவானிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தார். அசீம் சிவானியை காதலிப்பதாகவும் செய்திகள் கசிந்தன. இவர்கள் இருவரும் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் ஜோடியாக பங்கேற்றனர்.
இதற்கிடையில் அசீம் தனது மனைவி சையத் சோயாவை சட்டப்படி பிரிந்துவிட்டதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். ஏற்கனவே பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் அசீம் வைல்டு கார்ட் என்ட்ரி கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் சிவானி பங்கேற்றதால் என்னவோ அவர் பங்கேற்கவில்லை. கரோனா பரவலுக்கு பிறகு தொடங்கும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் அவர் நிச்சயம் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.