குழந்தைகளுடன் உரையாட உள்ள த்ரிஷா! - யுனிசெஃப் நல்லெண்ண தூதர் த்ரிஷா
சென்னை: த்ரிஷா விழிப்புணர்வு ஏற்படுத்திய பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறவில்லை என யுனிசெஃப் அமைப்பு கண்டறிந்துள்ளது.
திரைப்பட நடிகை, யுனிசெஃப் அமைப்பின் குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதரான நடிகை த்ரிஷா, 2019ஆம் ஆண்டு, குழந்தைகள் வன்கொடுமை, சுரண்டல்கள், குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் சில பகுதிகளுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பெண் குழந்தைகளுக்கு நேரும் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் சமூகங்களில் நடைபெறும் குழந்தைத் திருமணத்தை தடுக்கும் வகையில் பேசினார். மேலும் இளம் பருவத்தினரையும், இளைஞர்களையும் அவர் ஊக்குவித்தார்.
ஒரு வருடம் கழித்து, அந்தப் பகுதியில் குழந்தைத் திருமண சம்பவங்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் எதுவும் நடைபெறவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
வளரிளம் பருவ சிறுமிகள் தங்களைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்னைகளையும் பற்றி பேசுவதால் அதிகமாக தங்களை மேம்படுத்திக்கொண்டுள்ளனர்.
இந்த நல்மாற்றத்தை த்ரிஷாவின் ஊக்கமளிக்கும் பேச்சுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று மீண்டும் சிறுவர்கள் த்ரிஷாவை சந்திக்க விரும்பினார்.
சிறுவர்களின் வேண்டுகோளை ஏற்று சர்வதேச பெண் குழந்தைகள் தினமான அக்டோபர் 11ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு சிறுவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
இந்நிகழ்வு யுனிசெஃப் இந்தியா ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் நடைபெற உள்ளது. இதில்,
யுனிசெஃப் அமைப்பின் குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதர் நடிகை த்ரிஷா, யுனிசெஃப் முதல்வர் ஜாஃப்ரின் சவுத்ரி, ஆர்.ஜே.சனோ கலந்துகொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில், த்ரிஷா வளரிளம் பருவத்தினருடனும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் குழந்தை உரிமைகளுக்காகச் செயல்படும் செயல்வீரர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொள்ள உள்ளார்.